புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் இனியாவது நல்லது செய்வார்களா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியது. தொடர்ந்து அ.தி.மு.க. - பா.ஜ.க.விற்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ, தனது எக்ஸ் தள பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டு, “புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு, இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம்” என பதிவிட்டுள்ளார்.
செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுலை புகழ்ந்து பதிவிட்டு அதனை கட்சித் தலைமையின் எதிர்ப்பால் டெலிட் செய்த நிலையில், பிரதமர் மோடி அரசு குறித்து விமர்சித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.