'லட்டு பாவங்கள்' வீடியோவை நீக்கி உள்ளதாக பிரபல யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே மத்திய உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில், திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுபக்கம் மத்திய அரசும் விளக்கம் கேட்டு ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், திருப்பதி விவகாரத்தை தனிப்பட்ட முறையில் தீவிரமாக கவனித்து வருகிறார். தமிழ்நாட்டிலும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், லட்டு விவகாரம் தொடர்பாக, 'லட்டு பாவங்கள்' என்ற வீடியோவை தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ பல லட்சம் பார்த்து ரசித்தனர். ஆனால், வீடியோ சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்துக்களின் உணர்வகளை வைத்து இப்படி வீடியோ பதிவிடலாமா என்று பலரும் பரிதாபங்கள் சேனலை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தார்கள். கடும் எதிர்ப்பை தொடர்ந்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோ நீக்கி உள்ளது. மேலும் நீக்கப்பட்டது குறித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பரிதாபங்கள் சேனல் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பரிதாபங்கள் சேனல் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று கூறப்பட்டுள்ளது.