'அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக கடந்த ஜூன்28ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்கள் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
அமெரிக்கப் பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது எப்படி தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போது தான், அதன் பயன் நமக்கு தெரியும். ஏற்கனவே ஸ்பெயின் போன முதல்வர் ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். போலீசாரை கையில் வைத்திருக்கும், முதலமைச்சர் கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு எல்.முருகன் கூறினார்.