கமலாலயம் 
தமிழ் நாடு

பாஜகவிலிருந்து இவர்கள் ஏன் நீக்கப்படவில்லை…! - சாதிதான் காரணமா?

Staff Writer

சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக திருச்சி சூர்யா பா.ஜ.க.விலிருந்து கடந்த 19ஆம் தேதி இரவு அதிரடியாக நீக்கப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எந்த வருத்தமும் அடையவில்லை என்று கூறிய திருச்சி சூர்யா, எந்த நிலையிலும் அண்ணாமலை அண்ணனின் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, “திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே...”என்று நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவைப் போட்டு பரபரப்பைக் கிளப்பிய திருச்சி சூர்யா, இன்று தமிழக பாஜகவிற்கு சரமாரியான கேள்விகளைக் கேட்டுள்ளார்.

“பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாணராமனையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

திருச்சி சூர்யசிவா

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்துக் கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை?

பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?

எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது.” என்று சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.