விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூடுதலான அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது, பரவலாக வியப்பையும் கேள்விகளையும் உண்டாக்கியிருக்கிறது.
காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட இந்த முறை 0.44 சதவீதம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபடி, நேற்றைய தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டியில் 82.04 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 79.74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளும், அவரையடுத்து வந்த அ.தி.மு.க.வின் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகளும் பெற்றனர்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என அறிவித்தும், வாக்களிப்பில் சிறிதுகூடக் குறையவில்லை; கொஞ்சம் அதிகரித்திருக்கிறது.
இது எப்படி?
தேர்தலைப் புறக்கணிக்குமாறு அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு கொடுத்தும், அக்கட்சியின் தொண்டர்களே அதை ஏற்றுக்கொள்ளவில்லையா என்பது ஒரு புறம்.
முன்னணியில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே முக்கிய போட்டியாளர்களாக இருக்கும்நிலையில், அ.தி.மு.க.வின் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் யாருக்குச் சென்றிருக்கும் என முடியைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக யோசித்துவருகிறார்கள், அரசியல் வட்டாரத்தில்.
ஒரு சாத்தியம், இது இடைத்தேர்தல்; ஆளும் கட்சிக்கு வாக்களிப்போம் என வாக்காளர்களில் கணிசமானவர்கள் தி.மு.க. பக்கம் சாயலாம்.
அடுத்து, நெடுங்காலமாக இடைத்தேர்தல் புறக்கணிப்பு விரதம் இருந்துவிட்டு இந்த இடைத்தேர்தலில் மட்டும் திடீரெனக் குதித்த பா.ம.க.வுக்கு வாக்களிக்க குறிப்பிட்ட சாதியினர் முடிவுசெய்திருக்க வாய்ப்பு உண்டு.
மூன்றாவதாக, வாக்குகள் ஆளுக்கு கொஞ்சம் எனப் பிரிந்தால், கடந்த முறை 8,216 வாக்குகள் (4.3%) பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும் கணிசமாக வாக்குகள் கிடைக்கலாம்.
இவ்வளவு கேள்விக் கொக்கிகள் எல்லாம் எதற்கு, நாளைமறுநாள் காலையில் தெளிவான விடை கிடைத்துவிடப் போகிறது என சாவதானமாக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!