தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இது சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 530 தொலைவில் உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை (நெல்லூர்), சென்னைக்கு அருகாமையில் அக்டோபர் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் திங்கட்கிழமை பெய்ய ஆரம்பித்த கனமழை தற்போதுவரை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகியிருக்கும் நிலையில், வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழ்நாட்டிலும் புதுச்சேரி பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.