மக்களவைத் தேர்தலில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் ஆகியோர் இன்று காலையில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையிலிருந்தே தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றிவருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவுசெய்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது வாக்கைச் செலுத்தினார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு பள்ளியில் வாக்குப்பதிவு செய்தனர்.
பிரேமலதா வாக்களிக்க வந்தபோது, அங்கு தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இருந்தார். இருவரும் கட்டித் தழுவிக்கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.