தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக எத்தகைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் கருத்துகளை கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.
பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் - அலுவலகங்கள் - வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்.
இவ்வாறு கழகத் தலைவர் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.