சீமான் 
தமிழ் நாடு

‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ' - விஜய் கட்சியைக் கண்டு அஞ்சுகிறாரா சீமான்?

தா.பிரகாஷ்

“திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என்று தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ள சீமான், ‘இட்ஸ் வெரி ராங் ப்ரோ’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த திடீர் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

“தமிழருக்கு எந்த பெருமையும் இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். தமிழ்நாடு உருவாக முக்கிய பங்காற்றிய சங்கரலிங்கனாரை திராவிட மாடல் அரசு போற்றாதது ஏன்? சங்கரலிங்கனாரை பற்றி பேசாதது ஏன்? இன்னும் 5 ஆண்டுகள் திமுகவிடம் ஆட்சியை கொடுத்தால் நாட்டை கருணாநிதிநாடு என்று பெயர் வைத்துவிடுவார்கள்.

கழிப்பிடம், குடிப்பிடம் இந்த இரண்டிற்கும்தான் கருணாநிதி பெயர் வைக்கவில்லை. கருணாநிதி பெயர் வைக்க சரியான இடம் குடிப்பிடம்தான்.” என்று திமுகவை விமர்சித்தார்.

தொடர்ந்து விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கத் தொடங்கிய சீமான்:

“திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன இரண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பிஎச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. நான் பேச வரவில்லை என்றால், வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர சோழ பாண்டியர் யார் என்று தெரியாது. நீங்க வைத்துள்ள கட்-அவுட்டுகள் எல்லாம் நான் வரையவைத்த படங்கள்.

பெண் உரிமையை வேலுநாச்சியாரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். எங்கள் முன்னோரை தாண்டி பெரியார் ஒன்றும் கிடையாது. 72 வயதில் திருமணம் செய்து கொண்டவரிடமா பெண் உரிமையை கற்றுக் கொள்வது.?

தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக் கூடாது தம்பி. இப்போதுள்ள வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை. விவசாயக் குடும்பத்தில் பிறந்த எளிய மகன்.

ப்ரோ இது டிரெய்லர்தான் ப்ரோ… மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு எங்கள் மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுடன், கருப்பட்டி பால் கொடுக்கப்படும் என்ற கொள்கையை நான் கேட்டது கிடையாது. ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லிருந்தால் பரவாயில்லை... கருப்பட்டியில் எப்படி பால் வரும்? முட்டுச் சந்தில் நின்று கத்தி விட்டு போகிறவன் நான் என்று நினைத்து விடாதே தம்பி. நான் கருணாநிதி மகனோ, கருணாநிதி பேரனோ கிடையாது. நான் பிரபாகரனின் மகன். மகத்தான மாபெரும் தலைவனின் வாரிசு. 2026இல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.” என்று ஆவேசமாக சீமான் பேசினார்.

விஜய் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற பேச்சு வந்தபோது அவருக்கு ஆதரவாகப் பேசிவந்தவர் சீமான். தவெகவுடன் சீமானின் கட்சி கூட்டணி கூட வைக்கலாம் எனப் பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது விஜயை குறிவைத்து சீமான் பேசி இருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து பல இளைஞர்கள் விஜய் பக்கம் சாய ஆரம்பித்திருப்பதாவும் இதைத் தொடர்ந்து ஏற்பட இருக்கும் பாதிப்பை சரிக்கட்டத்தான் விஜயைக் குறிவைத்து சீமான் பேசுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நேற்று கட்சி ஆரம்பித்த விஜயைக் கண்டு சீமான் அஞ்சலாமா? என்றால் கட்சியின் தொண்டர்கள், இளம் வாக்காளர்கள் எல்லாம் விஜயால் கவரப் படும்போது அவர் எதிர்க்கத்தானே செய்வார் என்று நா.தகவினர் கூறுகிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram