விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள வச்சகாரபட்டியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பேன்சி ரக வெடிகள் உள்பட அனைத்து வகையான வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பட்டாசுகள் தயாரிப்புக்கான மருந்துக் கலவை தயாரிக்கும் பணி ஓா் அறையில் நேற்று நடைபெற்றது. அப்போது, மருந்துக் கலவை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் பணியிலிருந்த கன்னிசேரி புதூரைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் காளிராஜ் (20), முதலிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வீரக்குமாா் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னிசேரி புதூரைச் சோ்ந்த சரவணக்குமாா் (24), இனாம் ரெட்டியபட்டியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (17) ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 90 சதவிகிதம் தீக்காயமடைந்த சரவணக்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சுந்தரமூர்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலை மேலாளர் கருப்பசாமியைக் கைது செய்தனர். மேலும், ஆலையின் உரிமையாளர் முருகேசன், ஊழியர் முத்துக்குமார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.