சீமான் மீதான புகாரை திரும்பப் பெறும் விஜயலட்சுமி. 
தமிழ் நாடு

சீமான் மீதான புகார் வாபஸ் ஏன்? - விஜயலட்சுமி விளக்கம்!

Staff Writer

சீமான் மீதான புகாரை திரும்பப் பெற்ற விஜயலட்சுமி, ‘சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதில் சமரசம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் திடீரென விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் பழைய புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறை சம்மன் வழங்கப்பட்டாலும், சீமான் இரண்டு முறையும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்ற விஜயலட்சுமி சீமான் மீதா புகாரை எழுத்துப்பூர்வமாக புகாரை திரும்பப் பெற்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; "என்னுடைய புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். பணமெல்லாம் வாங்கவில்லை. அவர் நல்லா இருக்கட்டும்.” என்றார்.

மேலும், “எதிரி என்றால் வேதனையாக இருந்திருக்கும். அவருடன் வாழ்ந்த நபர் தானே. திட்டினார். இரண்டு லட்சுமிகள் வேண்டாம் என்றார். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவர் எப்போதும் நன்றாக இருக்கட்டும். நான் எனது தோல்வியை ஒத்துக்கொண்டே செல்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.