அமைச்சர் ரகுபதி 
தமிழ் நாடு

விஜய் பாஜகவின் ‘சி டீம்’! – அமைச்சர் ரகுபதி

Staff Writer

விஜய் பாஜகவின் ‘சி டீம்’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். மாநாட்டில் கிட்டதட்ட 45 நிமிடங்கள் விஜய் பேசினார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநாடு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை மக்களிடமிருந்து அகற்ற முடியாது. தவெக நேற்று வெளியிட்ட ஜெராக்ஸ் காப்பியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எங்களின் கொள்கைகளுக்கு சில விளக்கங்கள் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பல அரசியல் கட்சிகளின் ‘ஏ டீம்’, ‘பீ டீம்’ பார்த்திருப்போம், விஜய் பாஜகவின் 'சி டீம்'. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசி உள்ளார். அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை.

அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும். திராவிடம் தமிழகத்திலிருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக தி.மு.க. உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram