அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா, வடசென்னை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் அண்டு வரை சத்யா சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ. 3.21 கோடியாக இருந்த சத்யாவின் சொத்து மதிப்பு, 2021 பேரவைத் தேர்தலில் போட்டியிடும்போது ரூ. 16.44 கோடியாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக சத்யா மீதும், அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீடு உள்பட 18 இடங்களில் இன்று காலை 6 மணிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், வடசென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
தண்டையார்பேட்டை செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.