சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை நேற்று ஓய்வுபெற இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அரசு ஊழியர் ஒருவரை ஓய்வுபெற அனுமதிக்காமல் இடைநீக்கம் செய்து பிரச்னை தீர்ந்தபிறகே அவர் அதிலிருந்து வெளிவர முடியும்.
போலியான மோதல் படுகொலைகள் என மனிதவுரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்படும் போலீஸ் கொலைகளில் 12 சம்பவங்களில் ஈடுபட்டு சர்ச்சைக்குரியவராக வெள்ளத்துரை பிரபலம் ஆனவர்.
அவர் மீதான இடைநீக்கத்துக்கு மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் பரவலாக வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், அவரின் இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்த உள்துறைச் செயலாளர் அமுதாவே, அதை ரத்துசெய்து மாற்றி உத்தரவிட்டார்.
புதிய உத்தரவில், கிரிமினல் வழக்கு முடியாத நிலையிலும் வெள்ளத்துரைக்கு முறைப்படியான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மனித உரிமை ஆணையத்தில் அந்த நபர் மீது பதியப்பட்ட இரு வழக்குகளில் வெளியான உத்தரவுகளில், ஒன்றின்படி 3 இலட்சம் ரூபாயும், இன்னொன்றின்படி 2 இலட்சம் ரூபாயும் பிடித்தம் செய்யப்படுவதாக அமுதா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.