அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திராகாந்தி அம்மையாரின் ஆதரவாளராகிவிட்டாரா ஆளுநர் ஆர்.என்.இரவி என்று வி.சி.க. நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள குறிப்பில், “அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு ஒன்றிய அரசின் சார்பில் இம்மாதம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தக் கொண்டாட்டத்தின் மையக் கருத்தாக ‘ அடிப்படைக் கடமைகள்’ என்பதை வைக்கவேண்டும் எனப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.” என்று அக்கடிதத்தின் நகலையும் இணைத்துள்ளார்.
மேலும், “ ‘அடிப்படைக் கடமைகள்’ என்பது இந்திராகாந்தி அம்மையார் பிரதமாராக இருந்தபோது அவசரநிலைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 42 ஆவது திருத்தத்தின்மூலம் சேர்க்கப்பட்டதாகும். அதே திருத்தத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதச்சார்பின்மை’ என்பதும் சேர்க்கப்பட்டது.
மதச்சார்பின்மை என்பது சேர்க்கப்பட்டதை ஏற்காத ஆளுநர் அதே திருத்தத்தின்மூலம் சேர்க்கப்பட்ட அடிப்படைக் கடமைகள் என்பதை மட்டும் ஆதரிப்பதை அரசியல் முரண் நகை ( political irony ) என்று தான் சொல்லவேண்டும்.” என்றும் இரவிக்குமார் கூறியுள்ளார்.