மு.க.ஸ்டாலின் - உதயநிதி 
தமிழ் நாடு

உதயநிதியைத் துணைமுதல்வர் ஆக்கவே ஸ்டாலின் அமெரிக்கா போவார்!

Staff Writer

முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் துணைமுதலமைச்சராக ஆக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டதுபோல! 

திரைப்பட நடிகராக இருந்த உதயநிதி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சட்டப்பேரவை உறுப்பினராக நிறுத்தப்பட்டு, முதல் முறையாகவே அமைச்சராகவும் ஆனார் என்பதெல்லாம் பழைய கதை. 

அப்போதிருந்தே அவரை துணைமுதலமைச்சராக ஆக்கவேண்டும் என அமைச்சர்கள் சிலரும் கட்சி நிர்வாகிகள் பலரும் பகிரங்கமாகப் பேசி கவனமும் முக்கியத்துவமும் பெற்றனர். ஆனாலும் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் வகித்துவந்த இளைஞர் நலன், விளையாட்டுத் துறையைப் பிரித்து உதயநிதிக்கு அளிக்கப்பட்டது. பொதுவாக, முக்கியத்துவமும் கவனமும் பெறாமல் இருக்கும் இந்தத் துறை உதயநிதி பதவிக்கு வந்தபிறகு நிதி ஒதுக்கீடும் புதிய திட்டங்களுமாக முன்னணி இடத்தைப் பிடித்தது. 

சென்னைக்கு அருகே உலக அளவிலான சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது. அப்போது தலைநகர் சென்னையையே விழாக்கோலம் போடவைத்தனர். அரசுப் பேருந்துகள் செஸ்மயமாக அலங்கரிக்கப்பட்டன. பல ஓட்டப் பேரணிகளும் இதையொட்டி நடத்தப்பட்டன. 

இந்தத் துறை மட்டுமின்றி, மகளிர் துறையுடன் இணைந்த ஊரகக் கடனுதவி வழங்கல், சிறப்புத் திட்டச் செயலாக்கம் ஆகிய துறைகளும் உதயநிதிக்கு அளிக்கப்பட்டதால், அனைத்து மாவட்டங்களுக்கும் தொடர் பயணம் மேற்கொண்டு அரசுத் திட்டங்களை அவர் ஆய்வுசெய்தார். 

தலைமைச்செயலகத்திலும் அனைத்துத் துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் அதிகாரபூர்வமாகக் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. 

இதைத் தவிர, முதலமைச்சர் ஸ்டாலின் செல்லமுடியாத, சூழல்களால் வாய்க்காத பல நிகழ்வுகளுக்கு உதயநிதியே கலந்துகொள்வதும் நடந்துவருகிறது. மிக அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க உதயநிதிதான் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

அதற்கு முன்னர், சில அரசுரீதியான நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக விரைவில் உதயநிதி துணைமுதலமைச்சராக ஆக்கப்படுவார் எனும் தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒரு செய்தி முகமைக்குப் பேட்டியளித்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுக்காமல், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று பூடகமாகக் கூறினார். 

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார் என்று சொல்லப்படுகிறது. உதயநிதியைத் துணை முதல்வராக அறிவிப்பதற்காகவே முதலமைச்சர் வெளிநாடு செல்வார்.” என்று கூறியுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram