தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடல் ஆகியவை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, கட்சிக் கொடியை அறிமுகம் செய்வது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இதில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 19ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.
இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார்.
கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடுவில் விஜய் முகம் இருக்கும் வகையிலான கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சிக் கொடி அறிமுகம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியானவரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம்வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நம் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடி பாடலை வெளியிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.