சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய்யின் த.வெ.க. அலுவலகத்தில் இன்று முற்பகல் அக்கட்சியின் செயற்குழு, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. விஜய் தலைமைவகிக்க, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வகிக்க கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பல தீர்மானங்கள் கட்சியின் கொள்கை, நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்படியாக இருந்தன.
மாநாட்டுக்கு வந்து உயிரிழந்த 6 பேருக்கான இரங்கல் தீர்மானம், மாநாட்டுக்கு வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தவிர மற்றவை அனைத்தும் த.வெ.க.வின் நிலையைக் காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளன.
நீட் விவகாரத்தில் தி.மு.க. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாக நேரடியாகக் குற்றம்சாட்டியும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசு மீனவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக மாநில அரசுகள் எனப் பொதுவாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தகைசால் தமிழர் விருதுக்காக மாநில அரசுக்கும் குலசேகரன்பட்டினத்தில் இராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கும் வரவேற்பு தெரிவித்து தனித்தனி தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.