விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டி.டி.எஃப். வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டி.டி.எஃப். வாசன், 45 நாள் சிறை தண்டனை பிறகு வெளியே வந்தார். இதற்கிடையே அவருடைய ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டி.டி.எஃப் வாசன் காரில் சென்றுள்ளார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவனக்குறைவாக செல்போனை பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்குதல்; அஜாக்கிரதையாக கார் ஓட்டியது; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டி.டி.எஃப். வாசனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.