அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினருடன் நாளைமறுநாள் 7ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவது உட்பட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்டப் பேச்சுவார்த்தைகளை அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் நடத்தின. ஆனாலும் அரசுத் தரப்பில் அவர்களின் கோரிக்கையை ஏற்காதநிலையில், இந்த மாதம் 9ஆம் தேதி வேலைநிறுத்தம் என தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இதனால் பொங்கல் விழா நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுமா என்பது பெரும் கேள்விக்குறி எழுந்தது. பல தரப்பினரும் இதைப் பற்றி சமூக ஊடகங்களில் கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில், தொழிலாளர் சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமைச்செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
நாளைமறுநாளும் பேச்சு தொடரும் என அமைச்சர் அறிவித்தார்.
தொழிலாளர் தரப்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை கமலநாதன் உட்பட்டோர், நாளைமறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறும்; அதுவரை போராட்ட முடிவு தொடரும் என்று தெரிவித்தனர்.