போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காலில் 6 மாத குழந்தையைப் போட்ட ஓட்டுநருக்கு இட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று கோவை சுங்கம் கிளை பணிமனையில் குளிரூட்டப்பட்ட தங்கும் அறையைத் திறந்துவைத்தார். அப்போது, கோவை பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் கண்ணன் என்பவர், தன்னுடைய 6 மாத குழந்தையை அவரின் காலில் போட்டார். அதிர்ச்சியடைந்த அமைச்சர் என்ன ஏதுவென்று விசாரித்தார்.
காத்திருந்ததைப்போல அமைச்சரிடம் அவர் மனுவைக் கொடுத்தார். கண்ணனுடைய வயதான தாயாரும் உடன் வந்திருந்தனர். உடனே, அருகில் இருந்த அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த கண்ணனிடம் செய்தியாளர்கள் பேசியபோது, தனக்கு ஆறு மாதக் குழந்தையும், பள்ளி செல்லும் இன்னொரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், தன்னுடைய மனைவி டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு பெண் குழந்தைகளையும் தாயின் அரவணைப்பு இல்லாமல் தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றும் தன்னுடைய பெற்றோருக்கும் வயதாகிவிட்டதால் அவர்களை தேனியிலிருந்து கோவைக்கு அழைத்துவர முடியாத நிலை உள்ளதாகவும் கண்ணன் கூறினார்.
பல முறை கோவை பொதுமேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரே நேரில் வந்ததால் அவரிடம் குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கேட்டபடி, அவருக்கு அவருடைய சொந்த ஊரான தேனிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.