தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- டி.என்.பி.எஸ்.சி. ஏன் எஸ்.சி. சமூகத்தவருக்கு எதிராகச் செயல்படுகிறது என்று வி.சி.க. பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு எண்: 12/2023இன் படி தமிழ்நாட்டில் உள்ள 245 சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 19.08.2023இல் முதல் நிலைத் தேர்வும், 4, 5.-11-2023 ஆகிய தேதிகளில் இறுதித் தேர்வும், இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 29.01.2024 முதல் 10.02.2024 வரை நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது.
நேரடி நியமனம் (போட்டி தேர்வுகள் மூலம்) செய்யும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால், அதை காலாவதியானதாக அறிவித்து, அடுத்த தேர்வு காலத்திற்கு அதனை எடுத்துச் செல்ல இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 கூறுகிறது. ஆனால், மேற்கண்ட சிவில் நீதிபதிக்கான தேர்தல் 38 காலிப் பணிடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனக் கணக்கிட்டு Carry Forward செய்துள்ளனர்.
இதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் 18 பேர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு தேர்வானவர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த முடிவால் எஸ்.சி. சமூகத்திலிருந்து தேர்வாகி பணி நியமன ஆணைக்காகக் காத்திருக்கும் 15 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதை தி.க. தலைவர் கி.வீரமணி தன் அறிக்கை மூலம் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறியுள்ளார். அதன் பின்னரும் இதுவரை அந்தத் தவறை டி.என்.பி.எஸ்.சி. திருத்துவதற்கு முன்வரவில்லை.
தி.மு.க. அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக சாதியச் சார்புடன் டி.என்.பி.எஸ்.சி. நடந்துகொள்வது ஏன்?” என்று துரை. ரவிக்குமார் கேட்டுள்ளார்.