ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக்சயா அபியான் திட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய முதல் தவணை தொகையை மூன்று மாதங்களாகியும் விடுவிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
“ நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென நிதி ஒதுக்கீட்டின்படி சமக்ரா சிக்சயா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 3586 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 60 சதவிகித தொகையான ரூபாய் 2152 கோடி ஒன்றிய அரசின் பங்காகவும், 40 சதவிகித தொகையான ரூபாய் 1434 கோடி மாநில அரசின் பங்காகவும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
இதை நான்கு தவணைகளில் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் விடுவிக்கப்படவில்லை.” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றில் விவரங்களை எடுத்துவைத்துள்ளார்.
”அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.” என பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ”கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.” எனக் கூறி, வன்மையான கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
”கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாட்டின் கல்வி முறையை சீரழிக்கிற வகையில் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். நாடாளுமன்றத்தை அவமதிக்கிற, கூட்டாட்சி தத்துவத்தை புறக்கணிக்கிற செயலாகும். ஏற்கனவே, நீட் திணிப்பால் தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையொட்டி புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.