தமிழக அமைச்சரவை 
தமிழ் நாடு

14 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்- 47ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

Staff Writer

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு 38,698.80 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த முதலீடுகளின் வாயிலாக ஏறத்தாழ 46,931 நபர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதைக் கூறினார்.  

”குறிப்பாக, இந்த முதலீடுகள் பல்வேறு துறைகளில் வரக்கூடிய அளவிற்கு இந்த ஒப்புதல்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. மின்னணு துறை சார்ந்த Printed Secured Board (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல்ஃபோன் தயாரிப்புக்கான காட்சிமுறை உதிரி பாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய ஊசி மருந்துகள் மற்றும் இதர மருத்து பொருள்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலனிகள் தயாரிப்பு, எரிசக்தி துறையைச் சார்ந்திருக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் இந்த 14 முதலீடுகள் வரப்பெற்றிருக்கிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 5000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிட்., 13,180 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும்,

தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிட்., ஏறத்தாழ 10,375 கோடி ரூபாய் முதலீட்டில் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும்,

அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சார்ந்த King Shoes குழுமத்தின் துணை நிறுவனமான ஃபிரி டிரெண்டிங் இண்டஸ்ரியல் இந்தியா பிரைவேட் லிட்., 1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்கியூட் இந்தியா பிரைவேட் லிட்., 1395 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 1033 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையிலும்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசன் சர்கியூட்ஸ் பிரைவேட் லிட்., 612 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 1800 நபர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இந்த முதலீடுகள் வரப்பெற்றிருக்கின்றன.

அந்த முதலீடுகளுக்கான ஒப்புதல் நம்முடைய நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்தமாக பார்த்தீர்களேயானால், முதலீடுகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தென் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள்; அதேபோல், இங்கே இருக்கக்கூடிய காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் அருகே இருக்கக்கூடிய இராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இத்தகைய முதலீடுகள் இன்றைக்கு அமையக்கூடிய வகையில் தொழில் திட்டங்கள் வந்திருக்கின்றன.” என்று நிதியமைச்சர் தென்னரசு விவரித்தார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram