தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகம், கமலாலயம் 
தமிழ் நாடு

அண்ணாமலைக்குப் பதிலாக எச்.ராஜா, 5 பேர் ஒருங்கிணைப்புக் குழு!

Staff Writer

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் படிக்கச் சென்றுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் வரும் நவம்பர்வரை மூன்று மாதங்கள் கல்விப் பயிற்சியில் கலந்துகொள்ளும் அண்ணாமலையின் பணிகளை கவனிப்பதற்காக, கட்சியின் தலைவர் நட்டாவின் வழிகாட்டலில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் எச்.ராஜாவை அமைப்பாளராகக் கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் மாநிலத் துணைத்தலைவர்கள் எம். சக்ரவர்த்தி, பி. கனகசபாபதி, மாநிலப் பொதுச்செயலாளர்கள் எம். முருகானந்தம், இராம சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்குமென ஒன்றோ இரண்டோ மண்டலங்கள் பொறுப்பாகக் கொடுக்கப்படும். மாநிலத் தலைவர், குழுவின் ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூடிப்பேசி இதைத் தீர்மானிப்பார்கள்.

கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முக்கிய நிர்வாகிகளுடன் இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்தி எந்த முடிவையும் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.