உயிரிழந்த மருத்துவர் சிந்து 
தமிழ் நாடு

திருவாரூர்: காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலி!

Staff Writer

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் சிந்து இன்று காலை உயிரிழந்தார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு சிறுவன் உட்பட நேற்றுவரை மூன்று பேர் டெங்குவால் உயிரிழந்தனர். பல மாவட்டங்களிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு கண்டறியும் முகாம்களும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டதில் 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை மருத்துவ மாணவரான சிந்துவுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. புதனன்று அதே கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலையில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து, மகப்பேறு துறையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.