திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கின.
கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோயில்களிலும் ஊர்ப் பொது இடங்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
விவசாயமே வாழ்க்கை முறையாக இருந்த காலத்திலிருந்து குளிர் காலத்தில் பெருந்தீயை மூட்டுவது அறிவியல்ரீதியாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் இதையொட்டி 13 நாள்களுக்கு விழா உற்சவம் நடக்கும். டிசம்பர் முதல் தேதியன்று துர்க்கை அம்மன் உற்சவத்தைத் தொடர்ந்து, 4ஆம் தேதி காலையில் கொடி ஏற்றப்படும்.
அடுத்த 10 நாள்கள் காலையும் மாலையும் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும்.
டிச.13ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு மலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.
அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண பல மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் 30 இலட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.