ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தான் பேசிய பழைய வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த தொல்.திருமாவளவன், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.
இம்மாநாட்டில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். இது விசிக வின் தேர்தல் அரசியலுக்கான யுக்தியா? மக்களுக்கான நலனா? என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில், திருமாவளவன் தனது சமூக ஊடகப்பக்கத்தில் இன்று காலை 8: 43க்கு வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில்: “2016 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற குரலை வைத்தது விசிக. கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்பது பவர் ஷேர். நாங்கள் அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம். இதை 1999ஆம் ஆண்டே முன்வைத்தோம்.” என பேசியிருக்கிறார்.
அவரின் இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், ’யாருக்கு என்ன செய்தி சொல்ல திருமாவளவன் இதைப் பகிர்ந்துள்ளார்’ என கேள்வி எழுப்பத் தொடங்கிய நிலையில், அந்த வீடியோவை நீக்கிவிட்டார். மீண்டும் அதே வீடியோவை பகிர்ந்து, ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை 11:30 மணிக்கு மீண்டும் சமூக ஊடகத்திலிருந்து திருமாவளவன் நீக்கிவிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், திருமாவளவன் திடீரென பழைய வீடியோவை பகிர்ந்து, உடனே அதை நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.