வறுமையை ஒழித்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுள்ளது என தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கையை வி.சி.க. பாராட்டியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து...!
”தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. 2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது.
தற்போது ‘குடிசை இல்லா தமிழ்நாடு’ திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.
புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.
கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.
சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.
ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.” என்று திருமாவளவனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.