தொல். திருமாவளவன் - உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவை விசிக அழைத்தது அவர்களின் விருப்பம்! – உதயநிதி

Staff Writer

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவை பங்கேற்க அழைப்பு விடுத்தது அவர்களின் விருப்பம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

“மக்கள் பிரச்னைக்காக சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளோடு இணைவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மற்றக்கட்சியினரும் இணையலாம்.

மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதை தேர்தலுடன் இணைக்க வேண்டாம். திமுக தேர்தல் அறிக்கையிலேயே மதுவிலக்கு இடம்பெற்றுள்ளது. அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு அக்டோபர் 2-ல் நடைபெறவுள்ளது. மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு, அதை இதோடு பொருத்த வேண்டாம்” என்றார்.

மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்புகையில், கட்சி தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இதே கேள்வியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருப்பம் என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram