தலைமைச் செயலகம் 
தமிழ் நாடு

தமிழகக் கோயில்களில் நாளை சிறப்பு பூஜைக்கு தடையில்லை! – தமிழக அரசு

Staff Writer

உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்பட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டனமும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் கொடுக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை." என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நாளை தமிழகக் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு தடைவிதிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

"தமிழகக் கோயில்களில் நாளை சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்தத் தடை விதிக்கவில்லை. உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுவருகிறது. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான, உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியைப் பரப்புகிறார்கள். பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்ட முயலும் செயல் கண்டிக்கத்தக்கது. " என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.