தேர்தல் பத்திர ஊழல் பா.ஜ.க.வின் முகமூடியை கிழித்துள்ளதாகவும், உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க. தான் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சியினர் பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
”தேர்தல் பத்திர ஊழல் பா.ஜ.க.வின் முகமூடியை கிழித்துள்ளது. உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க. தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பா.ஜ.க. தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கதுறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பா.ஜ.க.வுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.
அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பா.ஜ.க. கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பா.ஜ.க.வினர் அதற்கு பதிலளிப்பதில்லை.
வதந்திகளை பரப்பி பா.ஜ.க.வினர் கவனத்தை திசை திரும்புகின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பா.ஜ.க.வினரிடம் பதில் இல்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவது பா.ஜ.க.வினர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் தெரியும். தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று கூறி பிரச்சனைகளை பா.ஜ.க.வினர் திசை திரும்புகின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வாரிசுகள் இடம் பெற்றுள்ளது பற்றி பிரதமர் பதில் கூறுவாரா? பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்ததற்கு பிரதமரின் பதில் என்ன?
தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பா.ஜ.க. சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் பா.ஜ.க.வின் முகமூடி கிழித்துள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் திமுக அமைச்சர்கள் மீது அரசியல் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை சட்டபூர்வமாக திமுக முறியடிக்கும்.
தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்த சாதனைகள் எதுவும் கூற முடியாததால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்துள்ளார். பா.ஜ.க.வினர் போதை பொருள் பற்றி பேசும் நிலையில் குஜராத்தில் இருந்து தான் அதிக போதை பொருட்கள் வருகின்றன. மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால தோல்வியால் நாடு முழுவதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதை பொருட்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.