தொலைந்துபோன செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த கோவை மாவட்ட காவல்துறையினர்  
தமிழ் நாடு

நம்புங்கள், 2,300 செல்போன்கள் மீட்பு!

Staff Writer

செல்போன்கள் தொலைந்துபோய் காவல்துறையிடம் புகார் கொடுத்தவர்களுக்கு அதைப் பெறுவதற்குள்ளோ அல்லது அதைப் பெறுவதற்கான அலைச்சலுக்கோ நடக்கும் நிகழ்வுகளை பெரும் கதையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சம்பவங்கள் இருக்கும்!

கோவையில் 2022ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை பொதுமக்கள் தவறவிட்ட 2,300 செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் கொடுத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”கோவை மாட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் செல்போனைத் தொலைத்தவர்கள் கொடுத்த புகாரின்படி இந்த வருடம் மட்டும் 504 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கொடுத்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் 94 லட்சம் ரூபாய்.

2022ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியிருக்கிறோம். தற்போது வரை 2300 செல்போன்களை மீட்டுக் கொடுத்துள்ளோம். இதில் 2022இல் 750 செல்போன்களும் 2023இல் 1100 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 3 கோடி மதிப்பிலான செல்போன்களை மீட்டுக் கொடுத்துள்ளோம்.

இவை திருடுபோனவை அல்ல; பொதுமக்களே தொலைத்தவை.

இந்த வருடம் மட்டும் 1,100 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 504 புகார்களில் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டோம். செல்போன் தொலைந்து போனால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போதும். இல்லையெனில், 100 கால் பண்ணி புகார் அளித்தால் போதும். காவல்துறையினர் உடனே செல்போனை தேடும் பணியைத் தொடங்கிவிடுவார்கள்.”என்று நம்பிக்கை அளிக்கும்படியாகச் சொன்னார் பத்ரி நாராயணன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram