யூடியூபர் நந்தகுமாரை மிரட்டி கேமராவை பறிக்கும் நபர் 
தமிழ் நாடு

‘நான் பெரிய ரவுடி தெரியுமா?’ யூடியூபருக்கு சென்னையில் சம்பவம்..!

Staff Writer

சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், பிரபல யூடியூபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஏ2டி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் நந்தகுமார். இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், செல்போன் சர்வீஸ் செய்வதற்காக தன் நண்பர்களுடன் ரிச்சி ஸ்ட்ரீட் சென்றுள்ளார்.

அப்போது, கேமராவில் வீடியோ எடுத்தவாறு நடந்து சென்றவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், நந்தகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ’நான் மிகப்பெரிய ரவுடி… நான் சொன்னால் அனைவரும் வந்து விடுவார்கள்…’ என மிரட்டியதோடு ஆட்டோ ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த ஆட்டோவில், மேலும் சிலர் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மிரட்டி கேமராவை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த ஒருவர் மது போதையிலிருந்த இளைஞர்களிடம் பேசி கேமராவை பெற்று தந்துள்ளார்.

இதையடுத்து, நேற்று தனது சேனலில் அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் நந்தகுமார், இந்த வீடியோவை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று கூறியிருந்தார்.

நந்தகுமார் வெளியிட்டிருந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், 3500க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில், “டெல்லி வரைக்கும் பயப்படாமல் போன நம்ம Soldier'னால சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில நிம்மதியா போக முடியல.... தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை” என்பது போன்ற கமெண்டுகளை அதிகம் பார்க்க முடிகிறது.

மேலும், இந்த சம்பவம் நடந்த பகுதியிலிருந்து, நூறு மீட்டர் இடைவெளியில் போலீசாரின் புறக்காவல் நிலையமும், சாலைக்கு மறுபுறம் துணை ஆணையர் அலுவலகம் இருந்த போதிலும், பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்றவர்களை போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்திருப்பதைப் பலரும் சமூக ஊடகத்தில் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், யூடியூபர் நந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தாமாக முன்வந்து கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.