பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூரில் இன்று நந்தனர் குருபூஜை நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண், தலித் என்பதால் பதவி ஏற்க முடியவில்லை என்றும் கூறினார். அதேபோல், சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர் என்றார்.
ஆளுநர் கலந்து கொண்ட இந்த நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என்.ரவி. இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.
இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?
பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?
அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம்.
நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.