சுப்ரபாரதிமணியன் 
தமிழ் நாடு

தேர்தல் வந்துவிட்டது ரோடு வருமா? - 75 ஆண்டுகால எதிர்பார்ப்பு... எழுத்தாளர் ஆவேசம்!

Staff Writer

’கோரிக்கைகளை நிறைவேற்றித் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்கிற குரல் ஆங்காங்கே எழுவதைப் பார்க்க முடிகிறது.

இதைப் போல ஒரு குரலை எழுத்தாளர் ஒருவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் டீச்சர்ஸ் காலனி இரண்டாவது வீதியில் வசிக்கும் மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.

இது தொடர்பாக அவர் எழுதிய பதிவு:

”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சாலை போடவில்லை. பல அரசியல்வாதிகள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பொய்யானவை.

இப்போது நமக்கு நாமே திட்டத்தில் சாக்கடை, சாலை போடுவதாக சொல்லிவிட்டு பணம் தந்தால்தான் சாக்கடைக்கு தோண்ட முடியும் என்று ஏழை மக்களிடம் பணம் பெற்று சில மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் எந்த வேலையும் நடக்கவில்லை, கேட்டால் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகின்றன என்று ஏதாவது காரணம் சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் தந்த பணம் ரூ.28 ஆயிரம். இது குறைந்த தொகை. இது போல் எல்லா வீடுகளிலும் பெற்ற தொகை லட்சக்கணக்கில். பணம் தராமல் போராடிப் பயனில்லை. தந்தோம். சாதாரண பனியன் தொழிலாளர்கள் இருக்கும் வீதியில அவர்களிடம் வாங்கிய பணம் ரத்தத்தாலும் வியர்வையாலும் நிரம்பியது ஆனால் அதை நிராகரித்து செயல்படுகிறார்கள். அரசியல்வாதிகள் இதையெல்லாம் கண்டு கொண்டு கொள்வதில்லை.

எனவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் பாண்டியன் நகர் டீச்சர்ஸ் காலனி இரண்டாவது வீதி சார்ந்த பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா என்னும் மனநிலையில் அதை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று சுப்ரபாரதிமணியன் தெரிவித்துள்ளார்.