சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ்வரன் என்பவர் ஓ.பி-யில் இருந்த பாலாஜி என்ற மருத்துவர் அறைக்குள் நுழைந்து, அறைக்கதவை பூட்டிவிட்டு மருத்துவரை சாரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார்.
இதில், மருத்துவருக்கு காது, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் கத்திக்குத்து விழுந்திருக்கிறது. மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்களும், சக ஊழியர்களும் வந்திருக்கின்றனர். உடனே கத்தியால் குத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அங்கிருந்த மருத்துவர்கள், கத்திக்குத்து வாங்கிய மருத்துவர் பாலாஜியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த மருத்துவமனைக்கு அருகில்தான் கிண்டி காவல் நிலையம் இருக்கிறது. 24 மணி நேரமும் இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2000-க்கும் அதிகமான நோயாளிகள் இங்கு தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல் மருத்துவரை வந்து பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு இங்கு ஹீமோதெரபி சிகிச்சை கொடுத்துள்ளதால், அந்த நபர் இங்கு ஏற்கெனவே வந்திருக்கிறார். அந்த நபரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், மருத்துவரை சென்று பார்த்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு தவறானது புரிதல் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஷின் தாய்க்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தவறு என்று யாரோ அவரிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், கோபமடைந்த நபர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மருத்துவர் பாலாஜி தற்போது உயிர் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார், என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.