“கூட்டம் எல்லோருக்கும் வரும். நயன்தாரா கடை திறக்க வந்தபோது 4 லட்சம் பேர் கூடினர். வீடியோ காட்டவா.. கூட்டத்தை வைத்து பேச முடியாது.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான் என விஜய் கூறியுள்ளாரே என செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு சீமான் அளித்த பதில்: “விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்கும்? பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த்தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும். எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.
அதெப்படி சமம் ஆகும்? அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா, பிகாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும். விரும்பி நாங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால், எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள்.
தமிழ்ப் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?
மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனவே, சமூக நீதி என்பதெல்லாம் சும்மா பேச்சு. திமுக கூடத்தான் வெகு நாட்களாக சமூகநீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. எங்கே இருக்கிறது நீதி? பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா?
தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. இதுதான் தமிழ்த்தேசியம். மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்.
வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. ஒன்னு கொள்கையை மாற்ற வேண்டும். அல்லது எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும். இரண்டையும் வைத்து குழப்பக் கூடாது. ஆளுநர் பதவி வேண்டாம் என அண்ணா காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் ஏன் வேண்டாம் என விஜய் விளக்க வேண்டும். கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவரை ஆளுநர் மாளிகையில் கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். பைத்தியங்களை வச்சிட்டு சேட்ட பண்றாங்க.
விஜய்யின் மொழிக்கொள்கை தவறாக உள்ளது. எனக்குத் தெரிந்தவரை திருமாவளன் விஜய்யுடன் கூட்டணிக்கு போக வாய்ப்பு இல்லை. எனக்கு பாடம் நடத்திய வாத்தியார் அப்படி செய்யமாட்டார்.
கூட்டம் எல்லோருக்கும் வரும். சேலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெறும் 40 விவசாயிகள் இருந்தபோது நயன்தாரா கடை திறக்க வந்தபோது 4 லட்சம் பேர் கூடினர். வீடியோ காட்டவா... கூட்டத்தை வைத்து பேச முடியாது. விஜய்காந்துக்கு மதுரையில் கூடாத கூட்டமா விஜய்க்கு கூடிவிட்டது. தமிழை காட்டுமிராண்டி என பேசிய பெரியாரை எப்படி புகழ முடியும்? என் இனத்தை அவமதித்தார். ” என்று அவர் கூறினார்.