நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் 
தமிழ் நாடு

நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி… சினிமா பாணியில் சேஸ் செய்த போலீஸார்... கொள்ளையன் என்கவுண்டர்!

Staff Writer

நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரிக்குள் இருந்த 7 பேரில் ஒருவரை காவல் துறை சுட்டுக்கொன்ற நிலையில், 5 பேரை கைது செய்துள்ளது. தப்பியோடிய ஒருவருவர் தேடப்பட்டு வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை குமாரபாளையம், வெப்படி காவல் நிலைய போலீசார் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து கண்டெய்னர் லாரி காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது கண்டெய்னரில் உள்ள கொள்ளையர்களை வெளியே வருமாறு போலீசார் வலியுறுத்தினர். அப்போது போலீசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கொள்ளையர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மற்ற ஆறு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களில் 5 பேரை தற்போது காவல் துறை கைது செய்துள்ளது. ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிடிபட்ட கண்டெய்னர் லாரிக்குள் கட்டுகட்டாக பணமும் கார் ஒன்றும் இருந்துள்ளது. இந்த கார் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடிக்க பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், கண்டெய்னரிலிருந்த பணம் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட இந்த லாரியில் இருந்தவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram