தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 10, 205 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர், “அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு” என்று கிராமங்களில் சொல்வார்கள். ஏனென்றால், அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு எந்தக் காலத்திலும் குறையாது” என்றார்.
மேலும், “அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமெனில், அரசு அலுவலர்களும் நன்றாக செயல்பட வேண்டும். முழு ஈடுபாட்டோடு அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் கேட்டுக் கொண்டார்.
”தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. விடைத்தாள்களை விரைவாக திருத்த உயர்தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுகிறது. அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குடிமைப் பணிகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு அக்டோபர் முதல் ஊக்கத் தொகை வழங்கப்படும். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அதேபோல், மத்திய அரசுப் பணிகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்வாக வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசு ஊழியர்களை பற்றி பேசும்போது, கோரிக்கை மனுவுடன் வரும் மக்களை அரசு ஊழியர்கள் உட்கார அவைத்து பேச வேண்டும் என்றும் அப்படி பேசும்போது மக்களின் பாதி பிரச்சனை தீர்ந்து போய்விடும் என்றும் அறிவுரை கூறினார்.