தெற்கு தேய்ந்தால் பரவாயில்லை என்று நினைக்கக்கூடியதாக மத்திய அரசு உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடி ஏற்றி ஆற்றிய உரை:
“கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.
ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை; சோகத்தில் வந்தவன். என் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் அரசியலுக்கு வந்தேன்.
முழுநேர அரசியல்வாதி என்பவர் யார்? அப்படி யாரும் கிடையாது. முழு நேர அப்பனும் இல்லை, மகனும் இல்லை. உங்கள் அன்புக்கு நான் இன்னும் கைமாறு செய்யவில்லை என்பதால் அரசியலுக்கு வந்துள்ளேன்.
இங்கு நடக்கும் கூட்டம், இந்த கொடி, இந்த மேடை எல்லாம் நான் சம்பாதித்த பணத்தில் வந்தவை. இவ்வளவு திமிராகப் பேசுகிறேனே என்று நினைக்கலாம். இந்த திமிர் பெரியாரிடமிருந்து வந்தது. பெரியாரிடம் கணக்கு கேட்டபோது, “இன்னொருத்தவன் பணத்தில் செலவு செய்தால்தான் கணக்கு கொடுக்க வேண்டும். இது என் பணம்” என்றார் பெரியார். அதேமாதிரிதான் நம் கட்சிக்காரர்களும் சொல்ல வேண்டும்.
தேர்தல் ஆணையம் சொல்வது மாதிரி 95 லட்சம் செலவுசெய்தால் கோவை தெற்கு தொகுதியில் நடந்ததுதான் நடக்கும். என்னை அரசியலை விட்டு போக வைப்பது ரொம்ன்ப கஷ்டம். என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டு. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக் கொண்டிருப்பேன். சக அரசியல்வாதிகள் என்பவர்கள் வியாபாரிகள். நாம் மாற்றுவதற்காக வந்தவர்கள். முதலில் தேசம், பின்னர் தமிழ்நாடு, அதுக்கு பிறகுதான் மொழி.” என்று கமல்ஹாசன் பேசினார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க ஆணிப்படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரிப்படையை நடத்துவது போல மத்திய அரசு நடத்துகிறது. படையெடுத்து வரும் எதிரிகளைப் போல விவசாயிகளை நடத்துகின்றனர்.
தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள். 1 ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு கிடைக்கிறது. என் சகோதரர்கள்தான் பீகாரில் இருக்கின்றனர் நன்றாக இருக்கட்டும்.
விவசாயிகளுக்கு தமிழகம் செய்திருக்கக் கூடியதை மத்திய அரசு செய்யவில்லை. எதிரி நாட்டு படையினரை நடத்துவதுபோல் விவசாயிகளை நடத்துகிறார்கள். இந்த வித்தியாசம் அண்ணா காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது. அவர் சொன்ன அந்த காரணம் இன்னும் அப்படியே இருக்கிறது. தெற்கு தேய்ந்தால் பரவாயில்லை என்று நினைக்கக்கூடிய மத்திய அரசு உள்ளது. நாம் கொடுக்க கூடிய ஒரு ரூபாயில் 29 பைசாதான் திரும்பி வருகிறது. எல்லோருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும்.” என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.