மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக தி.மு.க., எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கனிமொழி கூறியதாவது:
“குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்தது. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல், தி.மு.க. அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
மழை வெள்ள பாதிப்புக்கான நிவாண தொகையை இதுவரை மத்திய வர தரவில்லை. நல்ல திட்டங்கள் வரும்போது, அதற்கு தமிழக அரசு தடையாக இருந்ததில்லை.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்கு கால்வாசி நிதிதான் மத்திய அரசு கொடுக்கிறது. அவர்கள் கொடுக்கின்ற 70 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வீடு கட்ட முடியாது. மாநில அரசு தரும் முக்கால்வாசி நிதியை வைத்துதான் வீடுகட்ட முடியும்.
பிற மாநிலங்களில் இருந்து வந்து இந்த திட்டத்தை பார்வையிடக் கூடிய அமைச்சர்கள் ‘ஏன் இந்த திட்டத்துக்கு முதலமைச்சரின் திட்டம் என்று பெயர் வைக்கவில்லை’ என்று கேட்கிறார்கள். யார் ஸ்டிக்கர் ஒட்டுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நல்ல திட்டங்களை தி.மு.க. எப்போதும் எதிர்ப்பதில்லை.
இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க. அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை மாநில அரசுதான் வழங்கியது. மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை. கலைஞரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.” என்று கனிமொழி கூறினார்.