பிரதமர் மோடிக்கு மஞ்சள் மாலை அணிவிக்கும் பா.ஜ.க.வினர் 
தமிழ் நாடு

பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு நிதி! – பிரதமர் மோடி

Staff Writer

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் தமிழக வளர்ச்சிக்காக கொடுத்த நிதியைவிட, பா.ஜ.க. ஆட்சியில் மூன்று மடங்குக்கும் அதிகமான நிதி கொடுத்துள்ளதாக பிரதமர் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அடுத்த மாதப்பூரில் இன்று நடந்த பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

“இந்தியாவின் வளர்ச்சியில், தமிழகத்தின் கொங்கு மண்டலம் பல வகைகளில் அங்கம் வகிக்கிறது. ஜவுளி, தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதி, இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், இந்தப் பகுதியில் ஏராளமான தொழில்முனைவோர்களும், சிறு, குறு நிறுவனங்களும் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ஆதரவு வந்துகொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்.

என் மண் என் மக்கள் யாத்திரையை முன்னெடுத்துச் சென்ற ஆற்றலும், துணிவும் மிக்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வெறும் யாத்திரையாக மட்டும் செல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சியை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாயந்தது. அதனால்தான் ஐ.நா. சபையில் உரையாற்றும்போது, என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிதைகளை அங்கு பேசினேன். எனது நாடாளுமன்றத் தொகுதியில், காசி சங்கமம் என்ற மிப்பெரும் நிகழ்ச்சியை நடத்தினேன். நாட்டின் நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் செங்கோலை நிறுவி அதற்கு மிகப்பெரிய மரியாதையை கொடுத்திருக்கிறேன். இவைகள் மூலம் தமிழக மக்கள் என் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளனர் என்று என்னால் கூற முடியும்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும்.

தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க எப்போதுமே முன்னுரிமைக் கொடுத்து வருகிறது. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது தமிழக வளர்ச்சிக்காக கொடுத்த நிதியைவிட கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான நிதியை தமிழக வளர்ச்சிக்காக கொடுத்துள்ளோம். தமிழக வளர்ச்சிக்கான அத்தனைப் பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்துள்ளனர்.” என்றவர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சிய நடத்தியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இப்போது இந்தியா கூட்டணி என்று உருவாகி உள்ளது. டெல்லியில் எல்லாம் இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்ககு வரவேண்டும் என்றால், பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் சென்று அவரது ஆசீர்வாதங்களையும், வாக்குகளையும் பெற வேண்டும்.” என்று பிரதமர் பேசினார்.

முன்னதாக, விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டுக் காளையின் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் நினைவாக பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது.