தன் மீதான விமர்சனங்களுக்கு பணிகள் மூலம் பதிலளிப்பேன் என துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, சி.வெ. கணேசன், டி. ஆர்.பி. ராஜா, மெய்யநாதன், பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன்.
எனக்கு வாழ்த்துக் கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என் மீதான விமர்சனங்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன். அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அதன்படி எனது பணிகளை அமைத்துக் கொள்கிறேன்.
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சனங்கள் வந்தது. என்னுடைய பணிகள் மூலமாக மட்டும் தான் அதனை நியாயப்படுத்த முடியும். அமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் விமர்சனங்கள் வந்தது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதேபோல், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள், இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.