டாஸ்மாக் 
தமிழ் நாடு

டாஸ்மாக் வருமானம்: பயனுள்ள அட்வைஸ் செய்த பிரபலம்!

Staff Writer

டாஸ்மாக் மூலம் வருமானத்தின் ஒரு பகுதியைக் குடிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தையே இந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார்.

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:

கமல்ஹாசன்

சாலை விபத்து ஏற்படுவதனால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. டாஸ்மாக்கை மூடினால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறான கருத்து. டாஸ்மாக்கில் இருந்து வரும் வருமானத்தை எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒரு பகுதியை ஓரளவுக்கு மேல் குடிக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.

மது குடிப்பவர்களைக் குடிக்க வேண்டாம், குடிக்காதே என்று சொல்ல முடியாது. ஒன்று செய்யலாம், அளவோடு குடிப்பதற்கு அட்வைஸ் செய்யலாம். குடிக்க வேண்டாம் என்று கூறுவதை விட அளவோடு குடிக்கக் கூறி மனோத்தத்துவ ரீதியாக வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுபான கடைகளுக்கு அருகே ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.