பிரதமர் மோடி 
தமிழ் நாடு

தமிழகத்தில் இனிமேல் தி.மு.க. இருக்காது! – பிரதமர் மோடி

Staff Writer

”தமிழகத்தில் இனிமேல் தி.மு.க. இருக்காது” என்று பாளங்கோட்டை பொதுக்கூட்டதில் பிரதமர் கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். அதையடுத்து, இன்று காலை தூத்துக்குடியில் ரூ. 17, 300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாலை, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும், அதை குறை சொல்கிறார்கள்.ஆனால், நாங்கள் திட்டங்களையும், வளர்ச்சியையும் கொண்டு வருகிறோம்.

தி.மு.க.வும் காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. தி.மு.க.- காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள். தமிழகத்தில் இனிமேல் தி.மு.க. இருக்காது. முற்றிலும் அகற்றப்படும். குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, தூத்துக்குடியில் ரூ. 17, 300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

முன்னதாக தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழ்நாடு இன்று தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டங்கள் முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் முக்கிய பகுதி. இந்தத் திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியில் இருக்கலாம். ஆனால், இந்தியா முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.

இன்று தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்திருந்த போது, வ.உ.சி துறைமுகத்தை கப்பல் போக்குவரத்தின் பெரிய மையமாக மாற்றித் தருவேன் என்று வாக்களித்திருந்தேன். இன்று அந்த உத்தரவாதம் நிறைவேறியிருக்கிறது.

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. கடல் வாணிபத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த புத்துயிர் காரணமாக தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தினை குற்றம்சாட்டுகிறேன். இன்று நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் அவர்கள் ஆட்சியில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்தன். இன்று உங்களின் சேவகனாக உங்களின் கனவுகளை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.

நான் அறிவிக்கும் திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் வெளியிடாது. ஏனெனில் இங்குள்ள அரசு அதை வெளியிட விடாது. ஆனாலும் கூட, இந்த தடைகளைத் தாண்டின் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.