அறநிலையத் துறையைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 
தமிழ் நாடு

அமைச்சர் சேகர்பாபு தன் போக்கை மாத்திக்கணும்- மாணவர்கள் போராட்டம்!

Staff Writer

அரசாங்கத்தின் சமயச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டுவருகிறார் எனக் கூறி, மாணவர்கள் சென்னையில் கண்டனப் போராட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில், "இந்துசமய அறநிலையத்துறையே! கல்வி நிலையங்களில் மதத்தைத் திணிக்காதே! மாணவர்களை மதவாதிகளாக மாற்றாதே! மதச்சார்பின்மையைக் குலைக்காதே!" எனும் கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சருக்கு அஞ்சலகத்துக்குச் சென்று மனு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

அதையடுத்து, முன்னரே அறிவித்தபடி மாணவர் கழகத்தினர் நேற்று காலையில் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டனர். அந்த அமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார். சிறிது நேரம் முழக்கம் எழுப்பிய அவர்கள், இராயப்பேட்டை அஞ்சலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர். இரவு 7 மணிவாக்கில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் மாணவர்கள், முதலமைச்சருக்கு மனுவை அனுப்பினர்.

போராட்டத்தில் பேசிய பேரன்பு, ”பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் பள்ளி, கல்லூரிகளில் கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யவைப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே தி.வி.க. உட்பட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தோம். அண்மையில் சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில்150 மாணவர்களை கந்த சஷ்டி பாராயணம் பாடவைத்திருந்தார்கள். மேலும், 738 மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து 12 கோயில்களில் அவர்களைப் பாடவைக்க இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்தச் செயல்பாடு அவர் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே, அவர் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை நீண்ட காலமாகத் தொடர்ந்துவருகிறது. அதைச் சீர்குலைக்கும்படியாக அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தப் போக்கு தொடருமானால் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” என்று கூறினார்.