தினமலர் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் 
தமிழ் நாடு

கடும் எதிர்ப்புக்கு உள்ளான தினமலர்- முதலமைச்சர் வன் கண்டனம் ஏன்?

Staff Writer

தினமலர் நாளேட்டின் சேலம், ஈரோடு பதிப்புகளில் இன்று வெளியான முதல் பக்கச் செய்தி கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மிக காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

’காலை உணவுத் திட்டம்... மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு... ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்ற தலைப்பில், அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தினமலர் ஏட்டில் இடம்பெற்ற அந்தச் செய்திக்கு காலை முதலே பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்,"பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப் பிடுங்கும் கூரிய ஆயுதம் கல்வி. கற்போம், கற்பிப்போம்.” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்தில்,”

“உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.