மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும் அது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்கவுள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி புறப்படும் முன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி செல்கிறேன். நேருவுக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார். மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்பது அவரின் சாதனை என்றார்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார் இது மிகப்பெரிய சாதனை. மக்கள் இந்த மக்களவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான வழிமுறையாக பார்க்கிறேன்.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சி எப்படி இருக்கும் என கேட்டபோது, நன்றாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளது குறித்து கேட்டபோது எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.