டிசம்பர் 16ஆம் தேதி முதல் புயல் நிவாரண டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது உடபட்ட பல கேள்விகள் எழுந்தநிலையில், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சனங்களை வைத்துக்கொண்டு வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை அனைவருக்கும், அதாவது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கும்.
மேலும், திருவள்ளூர் உட்பட்ட மற்ற மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட வட்டங்கள், பாதிக்கப்பட்ட தாலுகாக்கள் என கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும்.
தற்போதைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை குடும்ப அட்டை அடிப்படையில்தான் கணக்கெடுத்துள்ளனர். குடும்ப அட்டை இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசுக்கு முறையீடு செய்து பெறலாம்.
வெள்ள பாதிப்பு நிலவரம் தொடர்பாக முதற்கட்டமாக தமிழகத்தில் ரூ.5,068 கோடி கணக்கெடுத்துள்ளோம். மத்தியக் குழு நாளை வருகிறார்கள். தமிழகத்தில் நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் குழுவினரிடம் இறுதி அறிக்கை அளிக்கப்படும்.
தமிழகத்தில் புயல்- வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உயிர்ச்சேதத்தைத் தவிர்த்திருக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் அவதூறுப் பிரசாரம் செய்கிறார்கள். முதலமைச்சரே நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அமைச்சர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் களப் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் புயல் பாதிப்பு வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் சேலத்தில் இருந்தார். தமிழகத்துக்கு வரும் மத்தியக் குழுவினரிடம், உரிய நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அழுத்தம் கொடுக்கலாமே!” என்று தங்கம் தென்னரசு கூறினார்.